கரண்ட் பில் கட்டபோறீங்களா.. மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு.. கூடுதல் டெபாசிட் கட்டணமும் ரத்து

 

கரண்ட் பில் கட்டபோறீங்களா.. மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு.. கூடுதல் டெபாசிட் கட்டணமும் ரத்து !!!!  

சென்னை: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், கூடுதல் மின்நுகர்வுக்கான டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு மின்வாரியம் நிறுத்தி இருக்கிறது.  ஏற்கனவே கூடுதல் கட்டணம் வசூலித்தவர்களுக்கு அடுத்த பில்லில் சரி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எல்லாரும் மின் இணைப்பு பெறும் பொழுது ஒரு டெபாசிட் தொகை கட்டியிருப்பார்கள்.. ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக இவ்வளவு மின்சார பயன்பாடு ஒதுக்கீடு கணக்கு உண்டு.   அந்த அளவை தாண்டும் பொழுது.. உங்களது இணைப்பின் பயன்பாடு வரம்பை உயர்த்தி அதற்கு ஏற்றார் போல டெபாசிட் தொகையின் பற்றாக்குறை தொகை வசூலிக்கப்படும். அதுதான் ACCD(Additional current consumption deposit) இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு ஏப்ரல்/மே மாத மின் கட்டணத்துடன் வசூலிக்கப்படும்.

கூடுதலாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த டெபாசிட் தொகை வசூலிக்கப்படும். இந்த தொகைக்கு மின்வாரியம் 4 சதவீத வட்டி வழங்குகிறது.  ACCD கணக்கிடும் முறை: கடைசி 12 மாதங்களுக்கு நம்முடைய மின்கட்டணத்தின் சராசரியின் 3 மடங்கு தொகை டெபாசிட் தொகையில் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு கடைசி 12 மாதத்தில் நம்முடைய மொத்த மின் கட்டணம் 12 ஆயிரம் எனில்.. அதான் சராசரி தொகை 1000 அதன் 3 மடங்கு தொகை 3000 ரூபாய் நம்முடைய டெபாசிட்டில் இருக்க வேண்டும்.

ஒருவேளை 2000 உங்கள் டெப்பாசிட் இருக்கும் பட்சத்தில்.. மீதம் உள்ள 1000 ரூபாய் உங்களுடைய மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.   ஒருவேளை தங்களின் வருட மொத்த மின் கட்டணமே.. 6000 எனில் 6000/12 = 500 அதன் 3 மடங்கு தொகை 1500 ஏற்கனவே 2000 ரூபாய் டெபாசிட்டில் இருந்தால் மேற்கொண்டு எந்த தொகையும் வசூலிக்கப்படாது.

ஒருவேளை தங்களுடைய மின் இணைப்பை திரும்ப ஒப்படைத்தால்.. இந்த டெபாசிட் தொகையை மின்வாரியம் தங்களுக்கு திருப்பி தர வேண்டும். இதுதான் தற்போது உள்ள நடைமுறை.               இதன்படியே டெபாசிட் தொகையைவிட மின்நுகர்வு கட்டணம் அதிகரித்தவர்களுக்கு கூடுதலாக டெபாசிட் கட்டணம் கடந்த மாதம் வசூலிக்கப்பட்டது . பொதுவாக கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பது குறித்து அஞ்சல் மூலமாகவோ, பதிவு செய்யப்பட்ட மின்நுகர்வோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ மின்வாரியம் தகவல் தெரிவிப்பது வாடிக்கை.    ஆனால், தற்போது மின்கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்பட்டதால் பிரச்சினை எழுந்தது. இதுகுறித்து மீட்டர் ரீடிங் அட்டையில் மின்வாரிய ஊழியர்கள் எதுவும் கூறவில்லை . ஆனால் மின் கட்டணம் செலுத்த போதும் போது தான் மக்களுக்கு விஷயமே தெரிய வந்திருக்கிறது.

ஏற்கனவே மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் கோடை வெயில் காரணமாக வீடுகளில் ஏசி, மின் விசிறி ஆகியவை அதிக அளவு வழக்கத்தை விட அதிகம். இதனால், நுகர்வோருக்கு வழக்கத்தைவிட இந்த மாதம் கூடுதலாக மின்கட்டணம் வந்திருக்கிறது      இந்த சூழலில், கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக கடும் சிக்கலை சந்தித்தனர். உதாரணமாக, ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு பெண் ஒருவர் தனது வீட்டுக்கான மின்கட்டணம் ரூ.5 ஆயிரத்தை செலுத்த சென்றுள்ளார். அவரிடம், மின்கட்டணம் ரூ.5 ஆயிரம், டெபாசிட் கட்டணம் ரூ.12,500 என மொத்தம் ரூ.17,500 செலுத்துமாறு மின் ஊழியர் கூறியுள்ளார்.    இதற்கு அந்த பெண் கடும் கண்டனம் தெரிவித்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதுதவிர, மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு மின்நுகர்வோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக, தங்களது எதிர்ப்புகளை பொதுமக்கள் பல்வேறு வகையில் பதிவு செய்துள்ளனர்.      இதையடுத்து, கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடுதல் டெபாசிட் வசூலிக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினும் அறிவுறுத்தி உள்ளார். எனவே, கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே நுகர்வோரிடம் வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை, அடுத்த பில்லில் கழிக்கப்படும்'" என்றனர்.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!